SASI KUMAR.M
வெற்றுத் தாள் பார்க்கும் போதெல்லாம்
ஏதாவது எழுதத் தோன்றுகிறது உனக்காக !
மற்ற நேரங்களில் சண்டை பிடிக்கும்
தமிழ் வார்த்தைகள்
உனக்கு எழுதும்போது மட்டும்
முண்டியடித்து முன்னே வரும் !
மூச்சுக்கு முன்னூறு முறை -
உன்னை நினைப்பதை விட
முப்பதே வார்த்தைகள் - உனக்கு
எழுதும் போது
முக்தியடையும் என் மனம் !
வார்தைகளை வரிசையாய் தொகுத்தெடுத்து ,..
ஆயிரம் முறை அச்சுத்திருத்தி
கருவிலிருக்கும் குழந்தை போல்
கவனமாய் சேர்ப்பேன்
என் கவிதையை உன் கைகளில் !
படித்து விட்டு ஏதாவது சொல்லுவாய் -என
ஆவலாய் உன் முகம் பார்க்கையில்
ஏதுமே சொல்லாமல் -நீ
அந்தப்பக்கம் செல்லும்போது
பிழிந்து விட்ட சக்கை போல்
விழுந்து கிடக்கும் மனசு ! - எனினும்
" பரவாயில்லை " - என்ற
உன் ஒற்றை சொல் கேட்கும் வரை
தேடத்தொடங்குவேன்
மற்றொரு வெற்றுத்தாளை !
உன்னை நேசிக்க ஆரம்பித்த முதல் நாளின் விடியலில் எழுதிய கவிதை ,..........
காதலாய் கண் பார் !
கடுப்படித்து முகம் திருப்பு !
கண்ணீரில் கலங்கடிக்கச் செய் !
சிறுபிள்ளையாய் நான்
பொம்மை கேட்கையில்
சிரித்துக்கொண்டே வாங்கிக் கொடு !
சீக்கிரம் தூங்கவேண்டும் - என
சிணுங்குகையில்
நிதானமாய் பேசி -என்
நித்திரை களை
அழுது நான்
அடம் பிடிக்கையில்
அப்பா போல்
அரிதாய் கோபம் கொள் !
சுட்டும் சுடர் விழியே கண்ணம்மா - என்று
முண்டாசுக் கவிங்கனில் - நான்
மூழ்கிக் கிடக்கையில்
சற்றே என்னை தட்டி எழுப்பி
"நீதான் என் கண்ணம்மா " - என்று
பொய்யாவது சொல் !
சாம்பார் என்று பெயர் சொல்லி
ரசம் உனக்கு பரிமாறுகையில்
சப்தமே இல்லாமல் சாப்பிடு !
வீடு வந்ததும்
விழுந்து கடிக்கும்
என் கோபம் தெரியாமல்
ஏதாவது விருந்தில்
எதிர்படும் பெண்ணை
" என் உறவுக்காரி " என
அறிமுகப்படுத்து !
வாசல் வந்ததும்
என்னைத் தவிர
எல்லா பெண்களும்
உன் தங்கைகள் என
சத்தியப் பிரமாணம் செய்து கொடு !
கற்றுக் கொள்ளும்
காரணம் கூறி
சமையலறை நுழைந்து - எனக்கு
சமையல் மறக்க செய் !
வைரமுத்துவின் வரிகளை
நான் வர்ணிக்கையில்
வாய் மூடி அமர்ந்திரு !
நான் ,
எழுதிய கவிதை
எடுத்து நீட்டுகையில்
எப்பொழுதும் போல்
வண்டி வண்டியாய் புகழ் !
விழித்திருந்து - நான்
விளையாடுகையில்
தூங்கி வழியும் உன்
கண்களின் தூக்கத்தை
துப்புரவு செய் !
உனக்கு பிடிக்காத
என் விருப்ப பாடல் கேட்கையில்
வேகமாய் நகராமல்
ரசிக்கப் பழகு ,... என்னையோ , பாடலையோ !
ஆண் என்று அதிகாரம் காட்டி
அடக்குமுறை செய் !
பேய்க் கதை படித்து - நான்
பெரும் பயத்தில் கிடக்கையில்
தலை கோதி சமாதானமாக்கி
சற்றே என்னை நிதானப்படுத்து !
அம்மாவை பார்க்கவேண்டும் - என்ற
அஸ்திரத்தை நான் அரங்கேற்றுகையில்
அடம் பிடிக்காமல் அனுப்பி வைத்து
அன்றைக்கு இரவே - என்னை
அழைத்துப் போக வந்துவிடு !
உனக்குப் பிடித்த
ரோஜா வை விட
எனக்கு பிடித்த
செம்பருத்தியை அதிகமாய் ரசி !
புதுச்சேலை கட்டி நின்றால்
புதிதாய் பார்ப்பது போல் பார் !
அலுவலக நேரங்களில் கூட
ஆறேழு முறை பேசு !
மொட்டை மாடியில்
மூன்றாம் பிறை வெளிச்சத்தில் -நான்
சுருண்டு தூங்குகையில்
அவசரமாய் தலையணை தேடாமல்
உன் மடியில் இடம் ஒதுக்கிக் கொடு !
மனசு மயங்கும் நாட்களில்
நான் கேட்காமலேயே
மல்லிகைப் பூ வாங்கிகொடு !
ஞாயிற்றுக் கிழமைகளில் கன
நேரம் கூட என்னை பிரியாதிரு !
" பிறந்த குழந்தையை விட
பிரியம் உன்மேல் தான் " - என்று
பிறந்த குழந்தையை புறக்கணி !
சபை நிறைந்த கூட்டத்தில்
சற்றும் என்னை பிரியாமல்
என்னுடனே இருக்கப் பழகு !
கடல் பார்க்க கூட்டிப்போய்
வெகு நேரம் என் கண் பார்த்துக்கிட !
மனசு காயப்பட்ட
மத்தியான வேலைகளில்
மந்தகாசமாய் பார் !
மௌனமொழி பேசு !
காலை நேரம் - நான்
கண் விழிக்கும் வரை
காத்திருந்து , நான்
கலைய்ந்து எழுகையில்
" கவிதை எழுத கற்றுக்கொடு " - என்று
மறுபடியும் என்னை
கலைத்துப்போடு !
ஆக மொத்தம்
நான் இருக்கும் வரை இரு
நான் இறக்கும் போது இற !
கவிதை கையகப்படுவது
இத்தனை கடினமா - என்று
இன்றைக்குத்தான் உணர்கிறேன் !!
காட்டாற்று வெள்ளம் போல்
இல்லையென்றாலும்
மழைச்சாரல் போல்
மந்தகாசமாய் கவிதை கொண்டுவரும் மனது
மரத்துப்போய் கிடக்கிறது இன்று !!
சிறகொடிக்கப்பட்ட
வண்ணத்துப் பூச்சியின்
வலியைப்போல் உணர்கிறேன்
வழக்கத்திற்கு மாறாக !!
ஒரு வரி எழுதி
அடுத்த வரி எழுத
அரைமணி நேரம் யோசிக்கும்
அவஸ்த்தை நேர்ந்ததில்லை
என்றைக்கும்,.. இன்றைக்குப்போல !!
வார்த்தைகள் வரிசையாய் வரமறுத்து
அகிம்சையாய் இம்சை செய்கின்றன என்னை ,...
" பரிதாபத்திற்கு உரிய ஜீவன் நீ" என்ற
பாவமான பார்வையோடு !!
கவிதையே வேண்டாமென்றாலும்
கனமான கவலை ஒன்று
அத்துமீறி நுழைகிறது நெஞ்சுக்குள் !!
கவலை எனை
கவனமாய் தின்று தீர்ப்பதற்குள்
ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிடு ,
" நீ எனக்கானவள் " என்று , -
நான் கவிதை எழுதுதர்க்காகவேனும் !!
நீ என்னை மறுத்து மனதை நொறுக்கிய ஒரு நாளில் ,..............
ஒரு வழிப்பாதை பிடிக்கும் எனக்கு !
திறக்காத புத்தகத்தில்
நுகராத வாசனையைப்போல் தான்
நமக்கான நேசமும்!!
உன் மனதை நான் அறிந்தாலும்
என்மனதை நீ உணர்ந்தாலும்
இருவருள்ளும் இன்னும்
மௌனம் எனும் திரை விலகியபாடில்லை !!
மௌனக்கூட்டத்தின் மத்தியில் - நான்
மாய்ந்து மாய்ந்து கத்தினாலும் - நீ
மருகி ஓடுகிறாய்
மனதிற்குள் ஒரு மாய வலை கட்டிக்கொண்டு !!
தெரியாத பூக்களின்
அறியாத பாஷைகள் போல்
ஆயிரம் முறை நாம் பேசிக்கொண்டாலும்
அதென்னவோ ,...
வாய் வார்த்தை மட்டும் வரமறுக்கிறது உனக்கு ,..
" எனக்கே எனக்கானவள் நீ" என்று சொல்ல !!
ஏதுமே சொல்லாமல்
மௌனமாய் நீ என்னை கொன்றாலும்
ஏதாவது சொல்லி
என் நேசத்தை நீ நிர்மூலப்படுத்தினாலும்
ஒரு வழிப் பாதை பிடிக்கும் எனக்கு ,...
என் நினைவுச்சுவடுகள் உன் நியாபகங்களை
ஓயாமல் உச்சரித்துக் கொண்டே இருக்கும் என்பதால்!!!
நினைக்காதே என்னை ,....
நிமிஷத்தில் கண்டுபிடித்து விடுகிறேன்
நீ என்னை நினைத்த மாத்திரத்தில் ,...
பெரும் அறையில் கிடக்கும் என்னை
மூச்சு திணற வைக்கும் - உன் நினைவுக் குவியலை !
காதலின் ஆழ்நிலையில்
சென்றவளை - சட்டென்று தட்டி எழுப்பி
"இல்லை" - என்ற சாதலை கையில் தந்து
சலனமே இல்லாமல் தள்ளிச்சென்றவன் நீ - இருந்தாலும்
நீ மட்டுமே என் காதலாகி போனதால் ,..
காணாமல் போ என்று
உன்னைப் போல் தள்ள முடியவில்லை
உன் நினைவுக் குவியலை என்னால் !!
தொடரும் உன் நினைவுகளிலிருந்து
வெளிச்சப் போர்வையில்
வெகு சுலபமாய் தப்பினாலும் ,..
உறக்கம் வர மறுக்கும்
இரவின் நீள் பொழுதினை
என்ன செய்வதென்று தெரியவில்லை !!
நான்
சராசரி அல்ல
நீ
அதட்டியவுடன் அழுவதற்கு !
சாகும் வரை சளைக்காமல்
சண்டை போடுவேன் உன்னிடம் !
வார்த்தைகளின் கூர்மை மழுங்கினாலும்
மௌனத்தின் கத்தியாலேயே
மறுபடியும் மறுபடியும்
குத்திக் கிழிப்பேன் உன்னை !
யுத்தத்தின் மத்தியில் - உன்னை
மன்னித்தல் என்பது
மருந்திற்கும் நிகழாது ..
மன்னித்தாலும் - அது
மறுபடியுமான நம் சண்டைக்கு
அனுமதி சீட்டு எனக்கு !
சண்டைகள் மட்டுமே
மண்டிக் கிடக்கும்
நமக்கான நாட்களில்
சமாதனம் என்பது நிகழவே நிகழாது ,.....
சண்டைகள் மட்டுமே
சரியான ஸ்நேகம் , நமக்கிருவருக்கும்
என நீ உணரும்வரை !!!
சந்தோஷம் தானென்றாலும் - இனியும்
பிறிதொரு சந்தர்பத்தில்
நிகழக்கூடாது
பிரிதலின் பொருட்டு ,
நமக்கிடையேயான கை குலுக்கல்!
தற்செயல் தான் என்று
தற்காலிகமாய் மறந்தாலும்
மையம் கொண்ட புயல் போல
மனதில் சம்மணமிட்டு கொள்கிறது - அந்த
கடைசி நேர கை குலுக்கல்!
முற்றுப் பெறாத
கவிதைகளுக்கு மத்தியில்
முன்னும் பின்னும் அலைகிறேன் ஊழிக்காற்றாக ,...
இறுகிய உன் பிடிக்குள்
உருகிய என் உயிரை நினைத்து !
ஒரே ஒரு முறை தானென்றாலும்
என் உயிர் பறித்த
உன் விரல் ஸ்பரிசத்தில் உணர்ந்தேன்
உன்னைத் தவிர
வேறு ஒருவனாலும்
என்னை பத்திரமாய் பொத்திப் பாதுகாக்க முடியாதென்று !
" உன்னைப்போல்
கவிதையாய்
கலவரப்பட முடியவில்லை - உன்
கை குலுக்கலில்" - என்று
சாதாரனமாய் செல்லும் உன்னிடம்
ஒரே ஒரு வேண்டுகோள் ,.....
தயவுசெய்து ,
பத்திரமாய் பார்த்துக்கொள்
பரஸ்பரம் பற்றிக்கொண்ட -நம்
விரல்களுக்கிடையில்
சிக்கிக்கொண்ட என் இதயத்தை !!!