கண்களை வாங்கிக் கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்
*******
ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில்
தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்து வைத்திருந்த உணவை
நிதானமாகச்
சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்துத்
தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லிப்
பரிகசித்தன
என் தலையணையில் சில
மல்லிகைகள்
*******
என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும்படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்
*******
இரண்டு இரவுகள் ஒரு பகல்
ஈரக் காற்றுகளால் நெய்த அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத்
தொடர் வண்டிப் பயணத்தில்
எனக்கு எதிரிலேயே
அமர்ந்து, தூங்கி,
சாப்பிட்டு, படித்துப்
பேசாமலேயே
இறங்கிப் போக பெண்ணே
உனக்குக் கற்றுக்
கொடுத்தது
யார்